என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஆர்கே பன்னீர் செல்வம்"

    • அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், தடை செய்யப்பட்ட குட்காவும் கடல் போலப் பெருகிக் கிடந்ததை எல்லாம் பழனிசாமி மறந்து விட்டாரா?
    • குட்கா பாஸ்கர் என மக்கள் கூறும் அளவு அமைச்சர்களை வைத்து குட்கா விற்று கல்லா கட்டிய பழனிசாமியா போதைப் பொருட்கள் பற்றிப் பேசுவது?

    அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் பண்ருட்டி அருகே மூதாட்டி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கில் விரைவாகக் காவல்துறையினர் குற்றவாளி சுந்தரவேல் என்பவனைச் சுற்றி வளைத்துச் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை; கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளதைக் கண்டு பொறுக்க முடியாத பழனிசாமி வழக்கம்போல அவதூறு அரசியலைத் தொடங்கியிருக்கிறார்.

    பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது. தற்போது அது மாறி பெண்களுக்கு எதிராக எவர் குற்றச்செயலில் ஈடுபட்டாலும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்படுகிறார்கள். அதோடு வழக்கு விசாரணையை விரைந்து முடித்து உச்சபட்சத் தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    2018 செப்டம்பரில் 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "18 மாத கைக்குழந்தை முதல் 100 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?'' என பழனிசாமி ஆட்சியை பற்றித்தான் அன்றைக்குக் கேள்வி எழுப்பினார். இதையெல்லாம் மறந்துவிட்டு கூச்சமே இல்லாமல் யோக்கிய சிகாமணி போல பழனிசாமி வேஷம் போடுகிறார்?

    * 2021 ஜனவரியில் துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் 68 வயதான மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கஞ்சாவுக்கு அடிமையான 16 வயது சிறுவன்.

    * 2021 பிப்ரவரியில் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் 80 வயது மூதாட்டிக்குப் பாலியல் வன்கொடுமை.

    * 2020 செப்டம்பரில் மதுரை மேலூர் அருகே குடிபோதையில் 80 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.

    * 2020 அக்டோபரில் திருநெல்வேலி: பணகுடி கோரி காலனியில் 68 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.

    * 2020 டிசம்பரில் பொள்ளாச்சி அருகே உள்ள நம்பியமுத்தூர் பகுதியில் கணவரை இழந்த 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.

    இப்படி பழனிசாமி ஆட்சியில் மூதாட்டிகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைப் பட்டியலிட முடியும்.

    தனது ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்களை மறந்துவிட்டு திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மட்டுமே பூதாகரமாகப் பேசுவதைப் பார்த்தால் பழனிசாமி மறதி நோய்க்குச் சிகிச்சை பெறுவது நல்லது.

    பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி பெண்கள் பாதுகாப்பில் துளியும் சமரசமின்றித் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருவதால்தான், இன்று இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

    அதோடு இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அதன் காரணமாகத்தான் பெண்கள் விரும்பும் ஆட்சியாகவும், பெண்களின் பெரும் ஆதரவு பெற்ற முதலமைச்சராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

    இதனையெல்லாம் கண்டு பொறுக்காமல் எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாதா? அதை வைத்து அரசியல் செய்ய முடியாதா? என நாள்தோறும் அலைகிறார் பழனிசாமி. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் கூட உள்நோக்கத்தோடு அதை வைத்து அரசியல் செய்கிறார். பழனிசாமியின் இந்த அரசியல் மறைமுகமாகப் பெண்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.

    பெண்களுக்குப் பயத்தை உண்டாக்கி அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் பாஜக-வின் கொள்கையை பழனிசாமி வழிமொழிவது வெட்கக்கேடானது.

    பழனிசாமியின் ஆட்சி பெண்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியாக இருந்ததற்கு பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமையே சாட்சி. பாலியல் குற்றவாளியான அதிமுக நிர்வாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமிக்கு, தற்போது பெண்களின் பாதுகாப்பே முதன்மை என ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரைப் பற்றி பேச எந்தத் தகுதியுமில்லை.

    அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், தடை செய்யப்பட்ட குட்காவும் கடல் போலப் பெருகிக் கிடந்ததை எல்லாம் பழனிசாமி மறந்து விட்டாரா? குட்கா பாஸ்கர் என மக்கள் கூறும் அளவு அமைச்சர்களை வைத்து குட்கா விற்று கல்லா கட்டிய பழனிசாமியா போதைப் பொருட்கள் பற்றிப் பேசுவது? அதிமுக ஆட்சியில் மக்களைச் சீரழித்த கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை எல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி அதன் புழக்கத்தைத் தடுத்துள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்குத் தெரியும்.

    தனது கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தியையும், பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களையும் சமாளிக்க முடியாமல் திணறும் அடிமை பழனிசாமி அதை மடைமாற்ற வீண் அவதூறுகளைக் கொட்டி என்னதான் கலர் கலராய் ரீல் விட்டாலும் அது எதுவும் மக்கள் மத்தியில் எடுபடாது.

    தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள் 2026-ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.O அமையும், முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவது உறுதி. கையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது காப்பாற்றிக் கொள்வீரா? இல்லை அதையும் அமித் ஷா காலடியில் அடமானம் வைத்துவிட்டீரா? அடிமை பழனிசாமி அவர்களே!

    இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • டிஏபி உரத்தை மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது.
    • சூப்பர் பாஸ்பேட் உரத்தால் பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.

    வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளி நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இறக்குமதியின் போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இட நெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது.

    எனவே, இது தொடர்பாக, மத்திய அரசின் உரத்துறையானது, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது.

    அதன்படி, 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடி உரமாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை கீழ்க்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    மூன்று மூட்டை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியாவும் (அல்லது) ஒரு மூட்டை (50 கிலோ) 20:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் (அல்லது) ஒரு மூட்டை (50 கிலோ) 16:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும்

    பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகச்சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதமும் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11 சதமும் உள்ளதால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும். இதனால், டிஏபி இட்ட வயலைப் போன்றே, பயிர்வளர்ச்சி செழித்து, விளைச்சலும் அதிகரிக்கும்.

    தற்போது, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளெக்ஸ் உரமும், சூப்பர் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    எனவே, டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடியுரமாக பயன்படுத்து வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×